கடலில் சேகரித்த சிப்பிகளை
ஆசையுடன் கொண்டுவரும் சிறுவனாக
ஒவ்வொரு நாளும்
ஒரு நாளின் வினோதக் கதை ஒன்றுடன்
உன்னைத்தேடி வருகிறேன்
நீ வேறு வேலையிலிருக்கிறாய்
வேறு சஞ்சாரங்களில் இருக்கிறாய்
காத்திருக்கிறேன் நெஞ்சில் பெருகும் கதையுடன்
கதை வளர்ந்து வளர்ந்து மனம் கனக்கிறது
கடைசியில் உன் நூறு வேலைகளில்
ஒரு வேளையாக " சொல்லு" என நீ சொன்னதும்
மடை திறந்து உன்னிடம்
சொல்லத் தொடங்குகிறேன்
உனக்கு சுவாரசியமாக இருக்கவேண்டுமே என
அந்த உண்மைக்கதையில் கொஞ்சம்
கற்பனைகளைச் சேர்க்கிறேன்
சம்பவங்களை மாற்றி அடுக்குகிறேன்
குரலின் பாவங்களில் உணர்ச்சிகளை கலக்கிறேன்
நீ அதை கேட்பதால் எனக்கு என்ன கிடைத்துவிடும்
என்று தெரியவில்லை
ஆனால் உன்னிடம் சொல்வதில்தான்
என் வாழ்வுக்கு அர்த்தமிருப்பதுபோல
நான் பதட்டமாக இருக்கிறேன்

சற்று நேரத்தில் உனக்கு தூக்கம் வந்துவிடுகிறது
அல்லது உன் கவனம் சிதறிவிடுகிறது
நீரில் ஒரு பந்து மிதந்து செல்வதுபோல
நீ விலகிச் செல்கிறாய்

என் கதையும் மேகக்கூட்டம் கலைவதுபோல
பாதியில் கலைந்து செல்கிறது
நான் ஒரு வெட்ட வெளியில்
நிராதரவாக நின்றுகொண்டிருக்கிறேன்

உண்மையில் உன்னிடம்
நான் சொல்ல வந்தது
ஒரு கதையல்ல
மாறாக
என் குரலை
என் இருப்பை

Comments